Published : 07 Nov 2022 12:37 PM
Last Updated : 07 Nov 2022 12:37 PM

போக்குவரத்து விதிமீறல் அபராத உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோப்புப்படம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து அரசு அக்டோபர் 19-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத தொகையை அதிகரித்திருப்பதன் மூலம், அதை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர். எனவே விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை உயர்த்துவதற்கு முன்பு பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே, இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x