ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளுக்கான ‘ஓஎன்டிசி’ தளம்: மத்திய அரசு அறிமுகம்

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளுக்கான ‘ஓஎன்டிசி’ தளம்: மத்திய அரசு அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: சிறு வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தி விற்பதற்கு வசதியாக, மத்திய அரசு ‘ஓஎன்டிசி’ என்ற டிஜிட்டல் நெட்வொர்க் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க முடியும்என்ற நிலை இருந்தது. இதனால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிறு வியாபாரிகளுக்கு உதவும்வகையில் ஓஎன்டிசி (OpenNetwork for Digital Commerce)என்ற டிஜிட்டல் நெட்வொர்க்தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில், உள்நாட்டு வர்த்தகமேம்பாட்டுத் துறை இதை வடிவமைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாறிவரும் இன்றைய நவீனவாழ்க்கை முறைக்கு ஏற்ப வியாபாரங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க முடிகிறது. பெரிய நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே இவ்வாறு ஆன்லைன் மூலம் வாங்க முடிகிறது. ஆனால், நாம் வசிக்கும் பகுதியில் உள்ள சிறிய வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்க முடிவதில்லை. இந்தகுறையை போக்குவதற்காகத்தான் ஓஎன்டிசி தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது, சிறிய வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் டிஜிட்டல் நெட்வொர்க் தளமாகும்.

பெரிய ஆன்லைன் நிறுவனங்கள், தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே இணையதள பக்கத்தில் முன்னிறுத்திக் காட்டும். சிறு வியாபாரிகளின் பொருட்களை காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்யும். அத்துடன், ஆன்லைன் நிறுவனங்கள் சிறிய வியாபாரிகளின் பொருட்களை தங்கள் இணையதளத்தில் காண்பிக்க 25-50 சதவீதம் வரை கமிஷன் பெறுகின்றன. ஓஎன்டிசி தளத்தில் சிறு வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த 3-5 சதவீதம் மட்டுமே கமிஷன் பெறப்படும். மேலும், இத்தளத்தில் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற எவ்வித பாகுபாடும் காட்டப்படாது. பொருட்களை மட்டுமே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படும். கோவையில் இந்த நெட்வொர்க் தளத்தின் பரிசோதனைசமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம், சிறிய வியாபாரிகள் பெரிதும் பயன் அடைவார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in