Published : 07 Nov 2022 06:30 AM
Last Updated : 07 Nov 2022 06:30 AM

தென்காசி | கரடி தாக்கியதில் 3 பேர் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாய நிலங்கள், கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்துவிலங்குகள் அடிக்கடி வெளியே வருவதுண்டு. அப்படி வரும் விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடையம் அருகே கிராமத்துக்குள் புகுந்தகரடி 3 பேரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

கடையம் அருகே உள்ள கலிதீர்த்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டமணி என்பவர், நேற்று காலையில் கடனாநதி அடிவார கிராமமான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் உள்ள கடைகளுக்கு வழங்குவதற்காக மசாலாபொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்றார். அப்போது சாலையோரம் பதுங்கியிருந்த கரடி ஒன்று வைகுண்டமணி மீது பாய்ந்தது. நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை கரடி தாக்கியது. அவரதுஅலறல் சத்தம்கேட்டு அப்பகுதியில் இருந்த சிலர் விரைந்து வந்துகரடியை விரட்ட முயன்றனர். அவர்களையும் கரடி தாக்கியது. இதில், பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன், இவரது சகோதரர் சைலப்பன் ஆகியோரும் காயமடைந்தனர்.

நீண்டநேர போராட்டத்துக்கு பின் கரடியை பொதுமக்கள் விரட்டினர். கரடி கடித்ததில் பலத்த காயமடைந்த 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராம மக்கள்சிவசைலம்- கடையம் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கரடியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கரடி பிடிபட்டது: மூன்று பேரை கடித்து காயப்படுத்திய கரடியை நேற்று இரவு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x