Published : 07 Nov 2022 06:19 AM
Last Updated : 07 Nov 2022 06:19 AM

கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூரில் அமைதியாக நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

கடலூரில் ஆர்எஸ்எஸ் பேரணியையொட்டி குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.

கள்ளக்குறிச்சி/கடலூர்/ பெரம்பலூர்: கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணி நேற்று நடைபெற்றது. ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, 75-வது சுதந்திர தினவிழா எனும் முப்பெரும் விழாவை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது.

அதன்படி கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை நகராட்சி அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது. பேரணியை எம்.ஏ.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இப்பேரணி சித்தரி தெரு, கவரை தெரு, காந்தி சாலை வழியாக மந்தைவெளியில் உள்ள பொதுக்கூட்ட திடலை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற 364 பேர் வெள்ளை மற்றும் காக்கி நிற சீருடை அணிந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து மந்தைவெளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடியேற்றப்பட்டது. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வடதமிழ்நாடு மக்கள் தொடர்பாளர் கல்யாண்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் கல்கி நாராயணன் நன்றி கூறினார். பேரணியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மேற்பார்வையில் விழுப்புரம் எஸ்.பி. நாதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தலைமையில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர்: கடலூரில் நேற்று மாலை 4 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. கடலூரைச் சேர்ந்த பாரிவள்ளல் பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி 4 மாட வீதிகள் வழியாக சென்று சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்துக்கு கடலூரைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்வராஜ், ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில குடும்ப ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த பொதுக் கூட்டம் மாலை 5.15 மணிக்கு முடிவடைந்தது.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா, கடலூர் எஸ்.பி. சக்திகணேசன் ஆகியோரது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸாரால் வாகன சோதனை நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்ற பேரணியில்
அணிவகுத்து செல்லும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்

பெரம்பலூர்: பெரம்பலூரில் ‘பதசஞ்சலன்- சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பேரணியை கஞ்சமலை பொன்னம்பல சுவாமி மடாதிபதி திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் தொழிலதிபர் கே.என்.ஜெயராமன் தலைமை வகித்தார். நகைக்கடை உரிமையாளர் வி.குணசீலன் முன்னிலை வகித்தார். பாலக்கரையில் தொடங்கிய பேரணி, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வானொலி திடலில் முடிவடைந்தது. இதில், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டத்தின் துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 155 பேர் கலந்துகொண்டனர். இதற்காக 919 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு: திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் தலைமையில், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.க்கள் கண்காணிப்பில் 2 பட்டாலியன் அதிரடிப்படை போலீஸார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கலவரத் தடுப்பு வாகனங்கள் வஜ்ரா, வருண், கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்ட வேன் உள்ளிட்டவையும் வரவழைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வானொலி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் திருச்சி மண்டல முக்கிய நிர்வாகி கிருஷ்ண முத்துசாமி சிறப்புரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x