பணி மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

பணி மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

காலவரையறையுடன் கூடிய பதவி உயர்வுக்கு வகைசெய்யும் பணி மேம்பாட்டுத் திட்டத்தை (Career Advance Scheme) உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி சென்னையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஐ.அருள் அறம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தகுதி யுள்ள, நேர்மையான நபரை உடனடியாக துணைவேந்தராக நியமிப்பது, தவறான பணிநியமனங்களை நீக்கும் அதிகாரம் பெற்ற குறைதீர்ப்பு பிரிவை ஏற்படுத்துவது, தகுதி, பணிமூப்பு அடிப்படையில் துறைத் தலைவர்களையும் மையங்களின் இயக்குநர்களையும் நியமிப்பது, சிண்டிகேட்டில் 2 பேராசிரியர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அருள் அறம் நிருபர்களிடம் கூறுகையில், “பணி மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆசிரியர்களுக்குக் காலவரை யறையுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உதாரணத்துக்கு பிஎச்டி பட்டம் பெற்ற உதவி பேராசிரியர் 4 ஆண்டுகளிலும் பிஎச்டி பட்டம் இல்லாதவர்கள் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுவிடுவர். இந்த திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். எனவே, பணி மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார். ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.சந்திரமோகன், பொருளாளர் பி.சக்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in