Published : 07 Nov 2022 04:30 AM
Last Updated : 07 Nov 2022 04:30 AM

சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளால் ஊழியர்கள் அச்சம்

சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த பாம்பை பாதுகாப்புடன் பிடித்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள்.

சேலம்: சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று கருநாகம் சுற்றி திரிந்ததைக் கண்டு, ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் அலுவலகம் இயங்கி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு அலுவல் பணிக்காக, இங்குள்ள அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்துக்குள் மஞ்சள் சாரை பாம்பு அலுவலகத்தில் இருந்து ஊர்ந்து, நுழைவு வாயில் அருகே உள்ள வேப்பமரத்தின் அடியில் உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி 7 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நேற்று மதியம் கருநாகப் பாம்பு மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் புகுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீரர்கள் சம்பவ இடம் வந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் பாம்பை கண்டு பிடிக்க முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் திரும்பச் சென்ற சற்று நேரத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டது. எட்டு அடி நீளம் கொண்ட கருநாகம் சரசரவென வளைந்து நெளிந்து ஊர்ந்து சென்றதை பார்த்தவர்கள் அலறினர். மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் புதர்மண்டிய இடத்துக்குள் கருநாக பாம்பு புகுந்து மறைந்தது. மாவட்ட ஊராட்சி அலுவலகம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருப்பதால், இங்கு ஏராளமான பாம்புகள் எளிதாக வந்து செல்கிறது.

அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் பாம்பு பயத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். பாம்பு மூலம் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்னதாக, மாவட்ட ஊராட்சி செயலர் உரிய நடவடிக்கை எடுத்து, புதர்களை அகற்றி, கட்டிடங்களை பராமரித்து சீரமைக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x