

கடந்த காலத்தில் இடைத்தேர்தல் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெறும். 2000-க்கு பிறகு, அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் இடைத் தேர்தலில்தான் முதன்முதலாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் கலாச்சாரம் பகிரங்கமாக நடக்கத் தொடங்கியது.
அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற திருமங்கலம் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மதுபாட்டில், அசைவ விருந்து கவனிப்பு என ஆடம்பர தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியது. அதனால், இந்த தேர்தலுக்குப் பிறகு ‘திருமங்கலம் பார்முலா' என்று பேசும் அளவிற்கு இந் தொகுதி தேர்தல் பிரபலமடைந்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே தேர்தல் நடக்கும் தொகுதி திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் நடந்த திருச்சி, புதுக்கோட்டை, சங்கரன்கோவில், ஏற்காடு, ஆலந்தூர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்களிலும் தேர்தல் ஆணையத்தின் கண் காணிப்பையும் மீறி பணம் பட்டுவாடா, தேர்தல் செலவுகளும் ஜோராக நடந்தன.
தற்போது நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒட்டு மொத்த திமுக, அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் குவிந்துள்ளனர். இந்த தொகுதியிலும் மற்ற இடைத்தேர்தல்களை போல் பணம் தண்ணீராக செல வழிக்கப்படுகிறது. திரும்பிய பக்கமெல்லாம், ஹோட்டல்கள், டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் தற்போது கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் தொகுதி எவ்வித பரபரப்புமின்றி அமைதியாகக் காணப்படுகிறது.
ஆனாலும், அரசியல் கட்சியினர், பணத்தை புரட்டி கட்சியினருக்கு பணத்தை முடிந்தளவு செலவழித்து இடைத்தேர்தல் பாரம்பரியத்தை காப்பாற்றி வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் திமுக, அதிமுக கரை வேட்டிக்காரர்களின் சொகுசு வாகனங்கள், அங்கும், இங்குமாக விர்விர்ரென்று சென்ற வண்ணமாக இருக்கின்றன.
கிராமங்களில் வயல்வெளி சாலைகள், சிறிய சந்துகளிலும் அரசியல் கட்சியினர் சொகுசு வாகனங்களில் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். முன்பெல்லாம், கரைவேட்டி அரசியல்வாதிகளை பார்க்கத்தான் கிராமங்களில் மக்கள் குவிவார்கள். தற்போது அவர்கள் வரும் சொகுசு கார்களை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க குவிகின்றனர்.
நகர் பகுதிகளில் இதுபோன்று கார்களில் அரசியல் கட்சியினர் உலா வருவது, அக்கட்சியினர் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எல்லாம் தேர்தல் வரைக்கும்தான் இப்படி வருவார்கள், பிறகு அவர்களை பார்க்கச் சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் என வாக்கு சேகரிக்க வரும் வேட் பாளர்கள், கட்சியினர் காதுபடவே மக்கள் பேசுகின்றனர்.