

சென்னை: தமிழகத்தில் பெண் மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை, செயலாளர் தாகிர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் ரத்த வங்கியில் இணை பேராசிரியராக பணியாற்றுபவர் லதா பாலகிருஷ்ணன். சிறந்த மருத்துவ நிபுணரான இவர், மாநில அரசின் பல விருதுகள், பாராட்டுகளை பெற்றவர். சமீபத்தில் ஆந்திர மாநில அரசால் சிறந்த மருத்துவ நிபுணராக பாராட்டப்பட்டு, அங்கு உள்ள ரத்த வங்கி மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இவர் மீது தமிழக சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். லதாவுக்கு தரவேண்டிய பேராசிரியர் பதவி உயர்வை அவருக்கு தராமல், ரத்த வங்கிக்கு சம்பந்தம் இல்லாத வேறொரு துறை மருத்துவருக்கு வழங்கியுள்ளனர். பதவிஉயர்வு விஷயத்தில் தனக்குமிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டதை எதிர்த்து லதா தொடர்ந்து போராடி வருகிறார். எனவே, அவரை மிரட்டிப் பணிய வைக்கும் வகையில் தற்போது தண்டிக்கும் செயலை செய்துள்ள சுகாதாரத் துறை செயலரை முதல்வர் நேரடியாக அழைத்து விசாரிக்க வேண்டும். மேலும், இந்த முறைகேடுகளில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
22 மருத்துவர்கள் பாதிப்பு: ஏற்கெனவே பணி இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் நடந்துள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 22 அரசு மருத்துவர்களை கடந்த ஜூன் 22-ம் தேதி அமைச்சர் முன்பு நிறுத்தி நீதி கேட்டோம். முறைகேடுகள் நடந்துள்ளதைஅமைச்சர் அப்போது உறுதிப்படுத்தினார். பின்னர் அடுத்த ஓரிருநாளில், பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. ஏற்கெனவே வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இல்லை. எக்ஸ்ரே இல்லை. கட்டிடம் பழையதாக உள்ளது என்று கூறி, அநியாயமாக பெண் மருத்துவர்களை கன்னியாகுமரிக்கு இடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டதையும், முதல்வர் உடனடியாக தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியதையும் அனைவரும் அறிவோம்.அதுபோலவே, இந்த விஷயத்திலும் முதல்வர் தலையிட்டு, பெண் மருத்துவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப் போராட்டக் குழு போராட்டத்தில் இறங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.