Published : 07 Nov 2022 07:23 AM
Last Updated : 07 Nov 2022 07:23 AM

திருவள்ளூர் | சேரன் விரைவு ரயிலின் இணைப்புக் கொக்கி உடைந்ததால் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்தன: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்ததால் பெட்டிகள் பிரிந்தன.

திருவள்ளூர்: திருவள்ளூரில் சேரன் விரைவு ரயிலில் இணைப்புக் கொக்கி உடைந்ததால் பெட்டிகள் பிரிந்தன. ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கோவை செல்லும் சேரன் விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, புறப்பட்டது. இன்ஜினுடன் சேர்த்து 23 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இரவு 11 மணியளவில், திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை பகுதிக்கு ரயில் வந்தபோது, ரயிலின் எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதையடுத்து, எஸ் 7 பெட்டி மற்றும் அதனுடன் இணைந்திருந்த இன்ஜின் உள்ளிட்ட 7 பெட்டிகளும், எஸ் 8 பெட்டி மற்றும் அதனுடன் இணைந்திருந்த மற்ற பெட்டிகளும் இரு பிரிவுகளாக பிரிந்து ஓடின. இதையறிந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். பயணிகள் பீதியடைந்தனர்.

வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில், ரயில் நிலைய பகுதியில் குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும், பயணிகள் உயிர் தப்பினர். இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை-பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடம் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். பிறகு, சென்னை- பெரம்பூர் கேரேஜில் இருந்து புதிய இணைப்பு கொக்கிகள் வரவழைக்கப்பட்டு, அவை மூலம் சேரன் விரைவு ரயிலின் எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய இரு பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதன்பின்னரே சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு பிறகு, ரயில் கோயம்புத்தூருக்கு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு கோட்ட மேலாளர் உத்தரவு: இணைப்புக் கொக்கி உடைந்து பெட்டிகள் பிரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: திருவள்ளூர் அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, ரயில் பெட்டிகள் பிரிந்தன. கொக்கிகள் மாற்றுவதற்கு இரண்டரை மணி நேரம் ஆனது. பயணிகளின் பாதுகாப்புக்கு முற்றிலும் அச்சுறுத்தல் இல்லை. இருந்தாலும் சிரமத்துக்கு வருந்துகிறோம். இந்த சம்பவத்தின் மூல காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலை தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x