

வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தின் மூலம் 1.90 கோடி பேர் பயனடைந்து உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இரண்டு மாதங்களில் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுகளை கடந்த மே 23-ம் தேதி முதல் கட்டணமின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதன்மூலம், தற்போதுள்ள 1.90 கோடி மின் நுகர்வோர் பயன்பெறுகின்றனர். இதனால், தமிழக அரசு ஏற்கெனவே செலுத்திவரும் மானியத் தொகையான ரூ.2,932 கோடியுடன் கூடுதல் மானியமாக ரூ.1,607 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.4,539 கோடி மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், நலிந்த கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களில் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் மின்சாரத்தின் அளவை 200 யூனிட்டுகளாக உயர்த்தி வழங்குவதால் சுமார் 1.11 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.
இதுதவிர, விசைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு 500 யூனிட்டிலிருந்து 750 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் உள்ள சுமார் 1.46 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்துக்கு அரசு மானியாக ரூ.340.61 கோடி வழங்கப்படுகிறது.
ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் வரை வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தால் 1.90 கோடி பேரும், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் 1.11 லட்சம் பேரும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் 1.46 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர். இவர்களில், வீட்டு நுகர்வோர் 78.55 லட்சம் பேர், கைத்தறி நெசவாளர்கள் 31,728 பேர், விசைத்தறி நெசவாளர்கள் 98,712 பேர் கட்டணம் ஏதும் இன்றி பயனடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.