

நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை பகுதியில் அமைந்துள்ள காஸ்மிக் கதிர் கள் ஆய்வகம், காஸ்மிக் கதிர்கள் ஆய்வில் சர்வதேச அளவில் முன்னோடி யாக திகழ்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி ஏற்பட்ட சூரிய புயலால், பூமியின் காந்தப்புலன் 2 மணி நேரம் பலவீனம் அடைந்தது என்று உதகையில் உள்ள ஆய்வு மையம் கண்டறிந்தது.
ஆய்வகத்தின் தலைமையிடமான புனேவில் இருந்து பேசிய தலைவர் எஸ்.கே.குப்தா, “உதகையில் உள்ள காஸ்மிக் கதிர்கள் ஆய்வகத்தில், காஸ்மிக் கதிர்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். காஸ்மிக் கதிர்கள் ஒரே அளவில்தான் (2 நானோ டெஸ்லா) உலகம் முழுவதும் பதிவாகும்.
ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி நள்ளிரவில், 40 நானோ டெஸ்லாவாக பதிவானது. இது, சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சூரியனில் இருந்து வெளியேறிய பொருட்கள், மணிக்கு 2.5 மில்லியன் கி.மீ. வேகத்தில் பூமியை மோதியதால், பூமியின் காந்தப்புலன் பலவீனம் அடைந்தது.
இதன் பாதிப்பு வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய பகுதிகளில் இருந்துள்ளது. ஆனால், இதன் பாதிப்பு குறித்து உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வகத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச அறிவியல் அமைப்பிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை, கடந்த மாதம் 21-ம் தேதி, சர்வதேச அறிவியல் அமைப்பு உறுதி செய்தது.
சூரியனில் இருந்து தொடர்ந்து பொருட்கள் வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மிகவும் கடுமையாக இருந்ததால், பூமியின் காந்தப்புலன் பலவீனம் அடைந்தது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கும், காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளுக்கும் சம்பந்தம் இல்லை.
சூரிய புயல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இயற்கையாகவே நிகழ்வதால் அதை கட்டுப்படுத்த முடியாது. இதுகுறித்து முன்கூட்டியே அறிய, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
உதகை காஸ்மிக் ஆய்வக விஞ்ஞானி அதுல் ஜெயின் கூறும்போது, “உலகின் பெரிய மியான் தொலைநோக்கி உதகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் துல்லியத்தன்மை அதிகரித்துள்ளதால், பூமி காந்தப்புலன் பலவீனம் அடைந்தது உதகையில் கண்டறியப்பட்டது. பூமியின் காந்தப்புலன் பலவீனமடைந்து, அதிக அளவில் கதிர்கள் வெளியேறினால் தொலைத்தொடர்பு, மின் வசதி, விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும். கடந்த 1859-ம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயலால், தந்தி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது” என்றார்.