

பெண் வழக்கறிஞர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்பி, அவரது கணவர், மகன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை நீதிபதி ஒத்திவைத்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி, மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக ஆஜராகி வரும் திசையன்விளையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரின் வீட்டில் செப்.11-ம் தேதி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ராமலிங்கம், சித்திரைகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் எல்.பிரதீப்ராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். சிறையில் உள்ள ஹரி நாடார், ராமலிங்கம், சித்திரைகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. வாதங்கள் முடிவடைந்த நிலையில் முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி ஒத்திவைத்தார்.