Published : 06 Nov 2022 07:15 PM
Last Updated : 06 Nov 2022 07:15 PM

''சாலையில் வாகனம் நிறுத்த ரூ.100 கட்டணமா?'' - மதுரை கூடலழகர் கோயில் பக்தர்கள் அதிருப்தி

மதுரை கூடலழகர் கோயில் முன்புற சாலையில் பார்க்கிங் கட்டணத்துடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

மதுரை: மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில் செல்வதற்கு வாகங்களை சாலையில் நிறுத்துவதற்குகூட ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கூடலழகர் பெருமாள் கோயில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் அருகே சன்னதி தெருவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4வது ஸ்தலமான இக்கோயிலின் உள்ள மூலவர் கருவறையில் உள்ள பெருமாள் கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார். பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் சங்க காலத்துக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட கோயிலாகும். ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம். இந்த கோயிலில் தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அதனால், இந்த கோயிலுக்கு திருவிழாக்கள் மட்டுமில்லாது தினமும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியில்லை. கோயில் முன்பும், அதன் அருகே உள்ள சாலைகளிலும் வாகனங்களை நிறுத்த வேண்டிய உள்ளது. ஆனால், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கார், வேனுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் உரிமையை கோயில் நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ''கோயிலுக்கென்று தனியாக பார்க்கிங் வசதியில்லை. அதனால் கோயிலுக்கு வருவோர் சாலையில்தான் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டிய உள்ளது. கோயில் முன் உள்ள இடத்தில் சில சமயங்களில் கியாஸ் சிலிண்டர்கள் வைத்து விடுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வருவோர் வாகனங்களைகூட நிறுத்த முடியவில்லை. கோயில் உள்ள சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. அங்கு செல்வதற்கு கூட வாகனங்களை சாலையில் நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம் கேட்கின்றனர்.

கார், வேனுக்கு ரூ.100 பார்க்கிங் கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. வாகனங்களை நிறுத்த பாதுகாப்பான பார்க்கிங் வசதியிருந்தால் கூட அவர்கள் இந்த கட்டணம் வசூல் செய்வதில் தவறில்லை. ஆனால், பார்க்கிங் வசதியே இல்லாமல் ரோட்டில் நிறுத்துவதற்கு கூட ரூ.100 கட்டணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம். பக்தர்கள் பல்வேறு மனவேதனைகளுடன்தான் கோயிலுக்கு வருகின்றனர். அவர்களிடம் வணிகநோக்கில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் பெறுவதை கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ''நான் தற்போதுதான் பணிக்கு வந்துள்ளேன். பார்க்கிங் வசூல் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. விசாரிக்கிறேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x