

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் இல்லாததால், அவசரத்துக்கு மருந்து கிடைக்காமல் பயணிகள் தவிக்கின்றனர். எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணிகளின் வசதிக்காக, தனியார் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், முக்கியமான ரயில் நிலையங்களில் மருந்துக்கடை இல்லாததால், அவசரத் தேவைக்கு மருந்து, மாத்திரை பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் மருந்துக் கடை அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தியாவசிய மருந்துகள்: இதுகுறித்து ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவசரமாக ஊருக்கு புறப்படும்போது, மருந்து, மாத்திரைகளை மறந்து செல்ல வாய்ப்பு உள்ளது. அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மருந்து, மாத்திரைகள் வாங்க, ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் இல்லை. எனவே, பயணிகளின் அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு, முக்கியமான ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை பரிசீலிக்கப்படும்: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருந்துக்கடை அமைப்பது தொடர்பாக பயணிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். பயணிகள் வருகை அதிகமுள்ள ரயில் நிலையங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்தில், இந்தக் கோரிக்கை ஏற்கப்படும்’’ என்றனர்.