

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 800 வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இத்தேர்தலில் 81 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணிகள், நடவடிக்கைகள் தொடர்பாக நிருபர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது:
தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்காக தொகுதிக்கு 4 கம்பெனி வீதம் 12 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தோம். இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து, மத்திய உள் துறைக்கு தெரிவித்தது. இதை யடுத்து உள்துறை 12 கம்பெனி துணை ராணுவப் படையினருக்கு 8-ம் தேதி (இன்று) முதல் 19-ம் தேதி வரை பணிகளை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அவர் கள் 2 நாட்களில் தமிழகம் வருவார்கள்.
3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பாக இதுவரை குறுஞ் செய்தி, தொலைபேசி, இ-மெயில் வாயிலாக எந்தப் புகாரும் வரவில்லை. திருப்பரங்குன்றத்தில் பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக மதுரை ஆட்சியரிடம் விவரம் கோரப்பட்டுள்ளது. தொகுதிகளில் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சியில் கடந்த 6-ம் தேதி வரை எதுவும் பிடிபட வில்லை. தஞ்சையில் ரூ.70 லட்சத்து 22 ஆயிரம் பிடிபட்டது. திருப்பரங்குன்றத்தில் ரூ.88 லட்சத்து 19 ஆயிரத்து 190 ரொக்கம் மற்றும் 41 கிலோ வெள்ளி, 4,162 கிராம் தங்கம் உட்பட ரூ.1 கோடியே 24 லட்சத்து 2 ஆயிரத்து 557 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் பிடிபட்ட ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 950 ரொக்கப்பணம் மற்றும் ரூ.18 லட்சத்து 28 ஆயிரத்து 557 மதிப்பு தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு திருப்பி அளிக்கப்பட்டன.
தொழில்நுட்ப வசதி
இந்தத் தேர்தலில் 2 புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. முந்தைய தேர்தல்களில் வாக்குப்பதிவு நில வரத்தை அறிய, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவல ருக்கு பிரத்யேக எண் வழங்கப் பட்டு, அவர் குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதை பெறு வதும், ஒருங்கிணைப்பதும் நேரத்தை அதிகரித்ததால், இம் முறை, ‘ஐவிஆர்எஸ்’ முறையில் கணினியில் இருந்து, வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கு தகவல் அனுப்பி, அவர் உடனடியாக நிலவரத்தைப் பதிவு செய்து அனுப் பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விரும்பும் நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் பெற்று கணினி மூலம் ஒருங்கிணைக்க முடியும்.
அதேபோல, தேர்தல் முடிந்ததும் 6 சதவீதம் வாக்குகள் பெற்ற வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை திரும்ப அளிப்பதில் இருந்த சிக்கல்களைப் போக்க, அதிலும் கணினி பயன்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், 6 சதவீதம் வாக்குகள் பெற்றவரை கணினியே பிரித்து, அவருக்கான வைப்புத் தொகைக்கான ரசீதையும் தயா ரித்து விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தலில் நசிம் ஜைதி
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (8-ம் தேதி) நடக்கிறது. இந்தத் தேர்தலின் சர்வதேச பார்வையாளராக இந்திய தேர் தல் ஆணையர் நஜீம் ஜைதி பங்கேற்கிறார். இதற்காக அவரும் சில தேர்தல் அதிகாரிகளும் அமெரிக்கா சென்றுள்ளனர்.