மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு: ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு

மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு: ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கத்தில் உள்ள 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இக்கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை (புதன்கிழமை) இடிக்கப்படவுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மவுலிவாக்கத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், "நாளை மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் இந்த கட்டிடத்தை பாதுகாப்பாக இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். 'இம்ப்ளோசன்' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடத்தை இடிக்கவுள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன" என்றார்.

தற்போது இடிக்கப்பட உள்ள கட்டிடத்தின் அருகில், கட்டுமான நிறுவனம் இதேபோல் 11 தள கட்டிடத்தையும் கட்டியது. இக்கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி கனமழை பெய்து கொண்டிருக்கும்போது, திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தற்போது இடிக்கப்பட உள்ள இக்கட்டிடத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், இக்கட்டிடமும் வலுவிழந்த நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இக்கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மவுலிவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில நாட்களாகவே கட்டிடத்தில் வெடி பொருட்களை பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெடிப்பொருட்கள் சரியாக பொருத்தப்பட்டிருக்கனவா, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்பவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தயார் நிலையில்..

நாளை கட்டிடம் இடிக்கப்படவுள்ள நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீஸார் வீடு வீடாகச் சென்று மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தி வருகின்றனர். மேலும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கருதி நாளை செய்தி சேகரிக்க வருபவர்களுக்காக குறிப்பிட்ட ஒரு பகுதியை காவல்துறை ஒதுக்கியுள்ளது.

முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கட்டிடம் இடிக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கான உரிய அறிவிப்பு வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in