Published : 06 Nov 2022 07:27 AM
Last Updated : 06 Nov 2022 07:27 AM

சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால பிரத்யேக வெளியேற்று சாய்தளம் திறப்பு

சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால பிரத்யேக வெளியேற்று சாய்தளம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில், வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் திடீர் தீவிபத்து போன்ற அவசர காலங்களில், வார்டில் இருந்து சுலபமாக வெளியேறுவதற்கு ஏதுவாக, பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம் (Emergency Ramp) திறக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குநர் பி.கே.ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபிக்கள் ரமணி, அனூப் ஜெய்ஸ்வால், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீ விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் வார்டில் இருந்து தரை தளத்துக்கு அவசரகால வெளியேற்று சாய்தளம் வழியாக எவ்வாறு பாதுகாப்பாக அழைத்து வருவது மற்றும் இதற்காக பிரத்யேக பயிற்சி பெற்றுள்ள ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து நிகழ்ச்சியின்போது காணொலி வாயிலாக விளக்கப்பட்டது. மருத்துவமனையின் 4-வது தளத்தில் உள்ள குழந்தைகள் வார்டில் இருந்து குழந்தைகளை தரை தளத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதும் காணொலி மூலம் விளக்கப்பட்டது.

டிஜிபி ரவி மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ரமணி, அனூப் ஜெய்ஸ்வால் ஆகியோர் புதிதாக திறக்கப்பட்டுள்ள அவசரகால வெளியேற்று சாய்தளம் வழியாக, 4-வது தளத்தில் இருந்து, தரை தளத்துக்கு இறங்கி அதை பார்வையிட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் கூறியதாவது:

மருத்துவமனையின் முதன்மை கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள குழந்தைகள் இதய சிகிச்சை பிரிவில் இருந்து அவசரகால வெளியேற்று சாய்தளம் (ரேம்ப்) கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வளைவு வசதி கொண்ட முதல் மற்றும் ஒரே குழந்தைகள் பராமரிப்பு மையம் இதுவே. மருத்துவமனையின் மற்ற கட்டிடத்தின் மற்ற தளங்களுடனும் இந்த சாய்தளம் இணைக்கப்பட்டுள்ளது.

5 நிமிடங்களுக்குள் பாதுகாப்பாக வெளியேறுவதை இந்த சாய்தளம் உறுதிசெய்யும். அவசரகால வெளியேற்ற வசதியை நோயாளிகள் பயமின்றி கையாள, மருத்துவமனை ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. சாய்தளத்தின் மேற்பரப்பில் சர்வதேச தரத்தில், சறுக்கும் தன்மைஇல்லாத டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. 2.4 மீ அகலம், 5 டிகிரி சாய்ந்த தன்மையுடன் இந்த சாய்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் கூறும்போது, ‘‘இதன்மூலம் அவசரகால வெளியேற்று சாய்தளம் கொண்ட முதல் சர்வதேச மருத்துவமனையாக மியாட் திகழ்கிறது. மற்ற மருத்துவமனைகளைவிட பாதுகாப்பானதாகவும், சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் வகையிலும் மியாட் மருத்துவமனையில் அவசரகால வெளியேற்று சாய்தளப் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x