Published : 06 Nov 2022 04:30 AM
Last Updated : 06 Nov 2022 04:30 AM
சென்னை: சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.10 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.மோகன்ராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் துணைச் செயலர் அந்தஸ்தில் பணியாற்றியவர் வி.மோகன்ராஜ். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு சினிமா பைனான்சியரான முகுந்த்சந்த் போத்ரா என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடன் தொகைக்காக கொடுத்த காசோலை வங்கியில் பணமின்றித் திரும்பிய நிலையில், மோகன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையே போத்ரா இறந்து விட்டதால், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா தொடர்ந்து நடத்தி வந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "ஐஏஎஸ் அதிகாரியான மோகன்ராஜ் பலரிடம் இதுபோல பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்து இருந்தால் அவர் பணி ஓய்வு பெற்று இருக்க முடியாது" என குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "மனுதாரர் தரப்பில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான மோகன்ராஜ் மீது தலைமைச் செயலரின் உத்தரவுபடி, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் உரிய விசாரணை நடத்தி, மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அதிருப்தி தெரிவித்தார். மேலும், பண மோசடியில் ஈடுபட்ட அதிகாரி மீது புகார் கொடுத்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகள் மீது தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர், பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும். உரிய விவரங்களுடன் தரப்படும் புகார்கள் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் மீதும், அதிகாரிகள் மீதும் உள்ள நம்பிக்கை போய்விடும் என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT