

தமிழக அரசால் வெளியிடப்படும் தமிழரசு இதழுக்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்ப்பதுடன், அனைத்து நூலகங்களுக்கும் இதழை அனுப்ப வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
தமிழரசு அச்சகத்துக்கு தரமணியில் புதிய அலுவலகம், அச்சக கட்டிடம் ரூ.6 கோடியே 23 லட்சத்தில் கட்டப்பட்டு, முதல்வரால் கடந்தாண்டு செப்டம்பர் 29-ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த அலுவலகம் மற்றும்அச்சகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழரசு இதழுக்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் தமிழரசு இதழ் அனுப்பப்பட வேண்டும். தமிழரசு இதழ் தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கிடைத்து, அதை படித்து அவர்கள் பயனடைய வேண்டும்'' என்றார்.