

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு குறித்து தெளிவான உத்தரவு ஏதும் வராததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தங்களது டெபிட் கார்டு மூலம் பணம் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குறிப்பாக எந்தெந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக் கின்றனவோ அந்த விற்பனை நிலையங்களில் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக் கப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, வேப்பேரி, புரசை வாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங் களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று டெபிட் கார்டை பயன்படுத்தி பணம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து, பூந்தமல்லி நெடுஞ் சாலையில் நெய்வேலி இல்லம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் காசாளர் பாபு கூறும் போது, “நாங்கள் பாரத ஸ்டேட் வங்கி யில் கணக்கு வைத்திருக்கிறோம். இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கார்டை பயன்படுத்தி பணம் கேட்டால் தரும்படி உத்தரவு வந்துள்ளது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணம் வந்து சேரவில்லை” என்றார்.
வேப்பேரியில் ஜெர்மையா பூங்கா எதிரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் விற்பனை நிலைய கண்காணிப்பாளர் ரேவதி கூறுகையில், “நாங்கள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருக்கி றோம். இந்த வங்கிகளில் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்றார்.
இதேபோல், வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலி யம் நிறுவன விற்பனை நிலைய உரிமையாளர் அபிட்நவாஸ் கூறும் போது, “பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கார்டை பயன்படுத்தி பணம் கேட்டால் பணம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆயில் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், நாங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து எங்களுக்கு உத்தரவும், பணமும் வந்தால் அந்த சேவையைச் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து, எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் 53 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 2 ஆயிரத்து 500 பெட்ரோல் நிலையங்களில் மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அதுவும் நாள் ஒன்றுக்கு ஒரு பெட்ரோல் பங்கில் 50 பேருக்கு மட்டும்தான் வழங்கப்படும். மேலும், ஏடிஎம் மையங்கள் அதிகளவு இல்லாத இடங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பணம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து முறையான உத்தரவு எதுவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. உத்தரவு வந்த பிறகுதான் எந்த பெட்ரோல் நிலையங்களில் பணம் வழங்கப்படும் என தெரிய வரும்” என்றார்.