Published : 05 Nov 2022 01:46 PM
Last Updated : 05 Nov 2022 01:46 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் டெல்டா, உள் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சமீபத்தில் பெய்த கனமழை

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (5-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (6ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7-ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x