தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு: நிபந்தனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு 

ஆர்எஸ்எஸ் பேரணி | கோப்புப் படம்
ஆர்எஸ்எஸ் பேரணி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதால் தமிழகத்தில் நாளை (நவ.6) நடைபெற இருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நாளை (நவ.6) அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (நவ.4) உத்தரவிட்டது. இந்த உத்தரவில், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த இடத்துக்குச் செல்லும் வழியில் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. எவ்வித ஆயுதங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. தனிப்பட்ட நபர் அல்லது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக் கூடாது. மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களையும் பாடக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது.

மேலும் ‘‘பேரணியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல, 44 இடங்களிலும் போலீஸார் மற்றும் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஏற்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் பொதுவெளியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, நவம்பர் 6ம் தேதி நடத்த இருந்த ஊர்வலத்தை நடத்த இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in