

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கடந்த அக்.31, நவ.1 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சாலைகளிலும், குடியிருப்புகளைச் சுற்றியும் மழைநீர் தேங்கியது. மாநகரின் பிற பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு மழைநீர் தேக்கம் இல்லாமல் இருந்தது.
பொதுமக்கள் பாராட்டு: பல இடங்களில் மழைநீர் தேக்கம்இருந்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்தது. கடந்த 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில், இந்த ஆண்டு கனமழையின்போது நாள்கணக்கில் நீர் தேக்கம் இல்லை. இதைக் குறிப்பிட்டு, சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் பணியை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டு உண்மையில் மழைநீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்ன காரணங்களால் அது சாத்தியமானது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் அளித்த பதில் வருமாறு:
சென்னையில் மழை பெய்தாலே மக்கள் அச்சமடைகின்றனர். மழை அவ்வளவு ஆபத்தானதா?
மழை ஒன்றும் பீதியை ஏற்படுத்தக்கூடியது இல்லை. அது ஒரு வளம், வரப்பிரசாதம். ‘நீரின்றி அமையாது உலகு' என்ற திருவள்ளுவரின் குறளே அதற்கு சாட்சி. நீரின்றி மனிதனால் வாழ முடியாது.
மழைக்காலத்தில் மக்கள் என்ன செய்ய வேண்டும்?
மழை மூலமாக மட்டுமே நமக்கு நீர் கிடைக்கும். அதுதான் முக்கிய ஆதாரம். அதனால் மழைநீரை தெருவில் விடாமல் மக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலே, பெருமளவு நீர் தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.
பெரும்பாலான இடங்கள் கான்கிரீட்டாக மாறிவிட்ட நிலையில் கிடைக்கும் இடங்களிலாவது நிலத்தில் நீர் ஊற மக்கள் அனுமதிக்க வேண்டும்.
மக்கள் தொகை
பெருக்கம் சென்னையில் வெள்ளம் ஏற்பட என்ன காரணம்?
சென்னை மாநகரம் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு 176 சதுர கிமீ பரப்பிலிருந்து 426 சதுர கிமீ பரப்பளவாக மாநகராட்சியின் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. அப்போது நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதுர கிமீ பரப்பில் சராசரியாக 26 ஆயிரம் பேர் வசித்தனர். ஆனால் 2022-ம் ஆண்டில் அது 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மாநகரில் மக்கள் தொகை பெருக்கம், மக்கள் தொகை அடர்த்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாநகரப் பகுதியில் இருந்த திறந்தவெளி நிலங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. மாநகரமே கான்கிரீட் பகுதியாக மாறிவிட்டது. தூய்மையைப் பராமரிக்க ஏதுவாக வீட்டு வெளிப்பகுதி முழுவதும் திறந்தநிலம் இன்றி சிமென்ட் பூசப்படுகிறது. சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகின்றன.
இப்படி செய்தால் மழைநீர் எங்கேபோகும்? வீட்டைச் சுற்றிதான் தேங்கும். கிடைக்கும் மழைநீரில், 90 சதவீதம் நிலத்தடி நீராக மாறாமல் வழிந்தோடி குடியிருப்புகளைச் சூழ்கிறது. பின்னர் கடலில் வீணாகக் கலக்கிறது.
சென்னையில் ஏற்படுவது வெள்ளமா? நீர் தேக்கமா?
கடந்த 2015-ம் ஆண்டு பெருமழை பெய்தபோது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளின்உபரி நீர், ஆறுகள் வழியாக நிரம்பி வழிந்து சென்னையில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு ஏற்பட்டது நீர் தேக்கம். மனித பிழைகளால், அந்தந்த பகுதி சார்ந்த பிரச்சினைகள் காரணமாக மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. நீர் தேங்குவதற்கான காரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு மாறும். அதற்கேற்ற தீர்வுகளை நோக்கி அரசு பயணிக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியாளர்கள் மழைநீர் வடிகால் கட்ட தொடர்ந்து நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டும் ஏன் சென்னையில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது?
கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டினாலும், நீர் வழிந்தோடும்வகையில் அறிவியல் ரீதியில் ஆய்வுசெய்து, மட்டம் பார்த்து கட்டப்படவில்லை. ஒரு வடிகாலுக்கும், மற்றொரு வடிகாலுக்கும் இணைப்பு ஏற்படுத்தவில்லை. ஒரு பகுதியில் குறிப்பிட்ட அளவு மழை பெய்தால், அதை சமாளிக்க எவ்வளவு கொள்திறனில் வடிகாலை கட்ட வேண்டும் எனவும் ஆய்வு செய்யவில்லை.
மேலும், மாநகராட்சி பராமரிக்கும் 30-க்கும் மேற்பட்ட பெருகால்வாய்கள் (Macro and Micro Drains) முறையாக தூர்வாரப்படாமல் கட்டுமானக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் கிடந்தன.
அறிவியல் முறைப்படி பணிகள்
இந்த ஆண்டு பருவமழையால் சென்னையில் நீர் தேங்கும் இடங்கள் குறைந்துள்ளதா?
10 ஆண்டுகளாக செய்யப்பட்ட குளறுபடிகளுக்கு உடனே தீர்வு கொடுத்துவிட முடியாது. இருப்பினும் இந்த அரசு 9 மாதங்களில் அறிவியல் முறையில் பெருமளவு பணிகளை முடித்துள்ளது. அதனால் பல இடங்களில் மிகக் கனமழை பெய்தும் மழைநீர் தேங்கவில்லை.
குறிப்பாக தியாகராயநகர் பகுதியில் மழைநீர் தேங்க, மாம்பலம் கால்வாய் முக்கிய காரணமாக இருந்தது. முந்தைய ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மாம்பலம் கால்வாயில் பல குளறுபடிகளைச் செய்திருந்தது. அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து, அறிவியல் முறையில் வடிகால்கள் அமைக்கப்பட்டதால் மிக கனமழை பெய்தும் இன்று தி.நகரில் நீர் தேக்கம் ஏற்படவில்லை.
அதேபோல், பல இடங்களில் நீர் தேக்கம் இருந்தாலும் சில மணி நேரங்களில் நீர் வடிந்துவிடுகிறது. வடிகால் பணிகளில் இப்போது சில குறைகள் இருந்தாலும். அடுத்த பருவமழை காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து முழு பலன் கிடைக்கும்.
காலநிலை மாற்றத்தால் சென்னைக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம்?
காலநிலை மாற்றத்தால் வரும் ஆண்டுகளில் 3 மாதங்களில் பெய்யவேண்டிய மழை 10 அல்லது 12 நாட்களில் பெய்யக் கூடும். ஆனால் ஆண்டு மழை அளவு குறையாது. மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறையும். குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வழிந்தோடும் நீர் அதிகமாக இருக்கும். நிலத்தில் ஊறும் நீரின் அளவு குறையும். வருங்காலத்தில் மழை வரும் காலத்தை கணிக்க முடியாத வகையில் இருக்கும்.
சென்னையில் வெள்ளத்தை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றின் உபரி நீரால் சென்னையில் வெள்ளம்ஏற்படக்கூடும். அவற்றை தூர்வாரி, சீரமைத்து நீர் கொள்திறனை அதிகரித்தால், உபரிநீர் வெளியேற்றம் குறையும். மாநகரப் பகுதியில் உள்ள கோயில் குளங்கள், குட்டைகள் பிற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் தேக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வெள்ளத்தையும் தடுக்க முடியும். நிலத்தடி நீரையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.