பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் முற்போக்கு பட்ஜெட்: முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் முற்போக்கு பட்ஜெட்: முதல்வர் ஜெயலலிதா பாராட்டு
Updated on
1 min read

பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் முற்போக்கான பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள செலவு மேலாண்மை ஆணையம் அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. சமூக பொருளாதார அடிப்படையில், சமூக நலத் திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஆணையம், செலவு மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்று நம்புகிறேன்.

சரக்கு சேவை வரியை அமல் படுத்தும்போது மாநிலங்களுக் கான நிதி தன்னாட்சி மற்றும் வருவாய் இழப்பீட்டுத் தொகை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நிதி அமைச்சர் உறுதியளித்திருப் பதை வரவேற்கிறேன். புதிதாக தொடங்கப்படவுள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தமிழகத்தின் பொன்னேரி நகரையும் சேர்த்திருப் பதை வரவேற்கிறேன். தமிழகத் தின் பின்தங்கிய பகுதிகள் பயன்பெறும் வண்ணம், சென்னை -பெங்களூரு சரக்கு போக்குவரத்து எக்ஸ்பிரஸ் சாலை, விசாகப்பட்டினம் - சென்னை சரக்கு போக்குவரத்து எக்ஸ்பிரஸ் சாலை ஆகியவற்றை தமிழகத்தின் பிற இடங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

தமிழக அரசு உத்தேசித்துள்ள மதுரை - தூத்துக்குடி சரக்கு போக்குவரத்து எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை கிழக்கு கடலோர சரக்கு போக்குவரத்து எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக கருதி, விசாகப்பட்டினம் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலையை மேலும் தெற்கு பகுதிக்கு நீட்டிக்க வேண்டும்

தமிழகத்தில் ஜவுளி மெகா தொகுப்பு அமைக்கும் திட்டத்தை வரவேற்கிறேன். அதேபோல், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டமும் தமிழகத்துக்கு தேவையான திட்டம். தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ செயல்படுத்த தனியார் முதலீடுகள் கணிசமான அளவு தேவை. அதற்கு இத்தகைய முதலீட்டு திட்டங்களை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி யளிப்பு திட்டத்தை வேளாண் பணிகள் தொடர்பான வேலை களுடன் இணைத்து மாற்றி செயல்படுத்த வேண்டும் என்ற எனது யோசனைகளை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நதிநீர் இணைப்பின் முக்கியத் துவம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருப் பதைப் பார்த்து மகிழ்கிறேன். விலை கட்டுப்பாட்டு நிதியை ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கி யிருப்பதையும், தமிழகத்தில் அதிநவீன சூரிய ஒளி மின் உற் பத்தி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தையும் வரவேற்கிறேன்.

காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள் ளிட்ட பாரம்பரிய நகரங்களை மேம்படுத்தும் திட்டத்தில் ரங்கத்தையும் சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். காவல்துறையை நவீனமய மாக்கும் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை பரிசீலனை செய்ததற்காக பிரதமருக்கு நன்றி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும், வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் முற்போக்கு பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in