Published : 05 Nov 2022 07:10 AM
Last Updated : 05 Nov 2022 07:10 AM

புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு: 81 ஏரிகள் முழுமையாக நிரம்பின

நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி.

திருவள்ளூர்/காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக புழல் உள்ளிட்ட சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கனமழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால், திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 2,763 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் 18.76 அடி நீர்மட்டமும் உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 292 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 874 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் 25.20 அடி நீர்மட்டமும் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 660 கனஅடியாக உள்ளது. இதேபோல் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 262 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் 6.79 அடி நீர்மட்டமும் உள்ளது. இங்கு நீர்வரத்து விநாடிக்கு 95 கனஅடியாக உள்ளது.

மேலும் 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரி, ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், ஏரிக்கு விநாடிக்கு 125 கனஅடி என வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 21 அடி நீர் இருப்பு உள்ளது. விநாடிக்கு 642 கனஅடி நீர் வருகிறது. ஏரியில் இருந்து விநாடிக்கு 118 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 49 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம் மற்றும் ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் 574 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 581 ஏரிகள் என மொத்தம் 1,155 ஏரிகள் உள்ளன. நேற்று காலை நிலவரப்படி, நீர்வளஆதாரத் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 38 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 11 ஏரிகள் என மொத்தம் 49 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 162 ஏரிகள் 75 சதவீதமும் 239 ஏரிகள் 50 சதவீதமும் 434 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 382 ஏரிகளில் 32 ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாகவும் 110 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் 170 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு அதிகமாகவும் நீர் இருப்பு உள்ளது. 47 ஏரிகளில் மட்டுமே 25 சதவீதத்துக்கும் குறைவான நீர்வரத்து உள்ளது. காஞ்சியின் முக்கிய ஏரிகளான தாமல் ஏரி, மாமண்டூர் ஏரிகள் நிரம்பின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x