

கோவை மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் கடந்த 24-ம் தேதி சுற்றுலா புறப்பட்டனர். மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு கடைசியாக உதகைக்கு வந்தனர். அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்குத் திரும்பினர். இரண்டு பேருந்துகளில் மாணவிகள் புறப்பட்டனர். அதில் முதலாவதாக சென்ற பேருந்தை அடிமாலியைச் சேர்ந்த நிஷாத்(34) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது, கோவையில் இருந்து இளைஞர்கள் சிலர் உதகைக்குச் சுற்றுலா செல்வதற் காக 3 கார்களில் புறப்பட்டனர். கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த வினய் கார்த்திக் (21), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வினித் (21), ரத்தினபுரியைச் சேர்ந்த முத்துக்குமார் (21), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கரண் (21) ஆகியோர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். வினய் கார்த்திக் காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை மேட்டுப் பளையம் - அன்னூர் சாலையில் இருசக்கர வாகனம் ஒன்றை முந்திச் செல்ல வினித் கார்த்திக் முயன்றார். காரை திருப்பியபோது, எதிரே உதகையில் இருந்து வந்துகொண்டிருந்த கேரள சுற்று லாப் பேருந்து மீது கார் மோதியது. இதில் கார் முழுவதுமாக சேதமடைந்து பேருந்தில் சிக்கிக் கொண்டது. காரில் இருந்த வினித், கரண், முத்துக்குமார் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த வினய் கார்த்திக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இறந்தவர்களது உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.