

மதுரை: மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜகவை பூத் அளவில் அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் சக்தி கேந்திரங்களை ஆய்வு செய்ய 39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக, அதிமுக வுக்கு அடுத்து மாவட்டம், மண்டலம், சக்தி கேந்திரம் அளவில் பாஜக அமைப்பு ரீதியாக பலமாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்த நிலையான பூத் அளவில் பார்க்கும்போது பாஜக பலவீனமாக உள்ளது. மாநிலம் முழுவதும் ஏராளமான பூத்களில் பாஜகவுக்கு நிர்வாகிகளே இல்லாத நிலை உள்ளது.
சமீபத்தில் பாஜகவில் மாநிலம் முழுவதும் மண்டல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் பூத் மட்டத்தில் பாஜகவுக்கு நிர்வாகிகளே இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து மக்களவை தேர்தலுக்கு முன்பு பூத் அளவில் கட்சியை பலப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதையொட்டி மக்களவை தொகுதி வாரியாக சக்தி கேந்தி ரங்கள் (5 பூத் அடங்கியது ஒரு சக்திகேந்திரம்) ஆய்வு செய்யப்படுகின்றன. இப்பணிக்காக, தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிக்கும் பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை தொகுதிக்கு அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், மதுரை- சுப.நாகராஜன், சிவகங்கை – கண்ணன், நாகை- எம்.முருகானந்தம், தேனி- ராம.சீனிவாசன், விருதுநகர்- ஏ.என்.ராஜாகண்ணன், ராமநாதபுரம்- ஏ.ஜி.பார்த்தசாரதி, திண்டுக்கல்- எம்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, திமுகவில் வாக்குச் சாவடி பகுதியில் குடி யிருப்பவர்கள், வாக்குச்சாவடி குறித்து நன்கு தெரிந்தவர்கள், களப்பணி செய்பவர்களை வாக்குச் சாவடி முகவர்களாக தேர்வு செய்து நவ. 11-க்குள் தலைமைக்கு பட்டி யலை அனுப்புமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக உத்தரவிட்டுள்ளது.
திமுகவை தொடர்ந்து, பாஜகவில் சக்தி கேந்திரங்களை ஆய்வு செய்ய மக்களவை தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து பாஜகவினர் கூறியதாவது: திமுக,அதிமுகவின் வெற்றிக்கு அவ்விரு கட்சிகளில் வார்டு கமிட்டிகளின் பங்கு முக்கியமானது. வார்டு கமிட்டி நிர்வாகிகள் மக்களுடன் நேரடி தொடர்பில்இருப்பார்கள். இதனால் பாஜகவிலும் பூத் கமிட்டியை பலப்படுத்தவும், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தொகுதி வாரியாக சக்திகேந்திரங்கள் ஆய்வுக்காக நியமிக்கப்பட்டுள்ள பாஜக பொறுப்பாளர்கள் ஆய்வுகளை முடித்து தலைமைக்கு அறிக்கை அனுப்புவர். அந்த அறிக்கை அடிப்படை யில், பாஜக மேலிடம் பூத் அளவில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நிர்வாகிகள் இல்லாத பூத்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு பாஜகவினர் கூறினர்.