Published : 04 Nov 2022 11:40 AM
Last Updated : 04 Nov 2022 11:40 AM

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பேராசிரியர் க.நெடுஞ்செழியன் | கோப்புப்படம்

சென்னை: "பேராசிரியர் க.நெடுஞ்செழியன் உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நலம் பெற ஏற்பாடுகளைச் செய்தோம். நலம் பெற்றுத் திரும்பி தனது அறிவுலகச் செயல்களைத் தொடர்வார் என்று பெரிதும் நம்பினேன். ஆயினும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் - முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்குக் 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை' நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது உரையாற்றிய நான், ''2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தைச் சொல்வதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும். முத்தமிழறிஞர் கலைஞரும் - இனமானப் பேராசிரியரும் இன்று இருந்திருந்தால் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு விருது வழங்கும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்" என்று நான் குறிப்பிட்டேன். அத்தகைய படைப்பாளியாகவும் போராளியாகவும் இருந்தவரைத்தான் இழந்துள்ளோம்.

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், தமிழ் இலக்கியத்தில் உலகாயதம், உலகத்தோற்றமும் தமிழர் கோட்பாடும், தமிழர் தருக்கவியல், தமிழரின் அடையாளங்கள், சங்க காலத் தமிழர் சமயம், சமூகநீதி, இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை, பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும், பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும் ஆகிய அவரது நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய கொடையாகும். 'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' என்ற அவரது நூலை 'அன்பகத்தில்' வெளியிட்டு உரையாற்றும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார்கள்.

அவர் உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நலம் பெற ஏற்பாடுகளைச் செய்தோம். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரைச் சென்று பார்த்து நலம் அறிந்து வந்தார். நலம் பெற்றுத் திரும்பி தனது அறிவுலகச் செயல்களைத் தொடர்வார் என்று பெரிதும் நம்பினேன். ஆயினும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார்.

அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவவே செய்யும். 'தமிழ் மரபும், பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்' என்று இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் புகழ் வாழ்க. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பேராசிரியர் க.நெடுஞ்செழியன் திருச்சி அருகேயுள்ள படுகை கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும் பணிபுரிந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் நெடுஞ்செழியன் 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

திருச்சியில் வசித்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (நவ.4) காலை அவர் உயிரிழந்தார். இன்று மாலை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x