

‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே, ‘உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வகம்’ தன்னிறைவு பெற்றுள்ளதாக ஆய்வக விஞ்ஞானி அதுல் ஜெயின் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் காஸ்மிக் கதிர்கள் ஆய்வகம் இயங்குகிறது. இங்கு, 1954-ம் ஆண்டு முதல் காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வகம், கடந்த ஜூன் மாதம் சூரிய புயலால் பூமியின் காந்தப்புலன் பலவீனம் அடைந்தது என்பதை கண்டறிந்ததாலும், துல்லியமாக கணித்ததாலும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
உபகரணங்கள் தயாரிப்பு
உள்நாட்டில் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின், முன் உதாரணமாக உதகையில் உள்ள காஸ்மிக் கதிர்கள் ஆய்வு மையம் திகழ்கிறது. இந்த ஆய்வகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பே, ஆய்வுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
25 ஆயிரம் சதுர அடி பரப்பில் நிறுவப்பட்டுள்ள 400 பிளாஸ்டிக் சின்டிலேடர் கதிர் கண்டறியும் கருவிகள், 3,712 மியான் கண்டறியும் கருவிகள் அடங்கிய தொலைநோக்கிகளுக்கான தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, 3,726 மியான் கண்டறியும் கருவிகளைக் கொண்டு, கூடுதலாக ஒரு தொலைநோக்கி நிறுவப்பட்டு வருகிறது.
அதிவேக கணினித் தொகுப்பு
1,248 தனி கணினிகள், 600 டிபி திறன் கொண்ட சூப்பர் கணினி உருவாக்கப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 42-வது அதிவேகமானது என்கிறார் ஆய்வக விஞ்ஞானி அதுல் ஜெயின். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
காஸ்மிக் கதிர்கள் அதிக சக்தியுடையவை. நாள்தோறும் அனைத்துத் திசைகளிலும் 24 மணி நேரம் சேகரிக்கப்படும் சமிக்ஞைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதற்குத் தேவையான துல்லியமாகக் கணிக்கும் உபகரணங்களை, இங்கேயே நாங்கள் வடிவமைக்கிறோம். இதனால் அவற்றின் செலவு பெருமளவு குறைகிறது. பழுது ஏற்பட்டால், அதை சரி செய்யவும் முடிகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக, இந்த ஆய்வுக்கான கருவிகள், கணினி உபகரணங்கள், மென்பொருட்களை தயாரித்துக்கொள்கிறோம். இந்த ஆய்வகத்தில், நாளொன்றுக்கு சுமார் 22 ஜிபி தரவுகள் பெறப்படுகின்றன. இவற்றை சேமிக்க அதிவேக மற்றும் திறனுடைய கணினி தொகுப்பு தேவை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான கணினி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு வகுப்பு
இந்த ஆய்வகத்துடன் இணைந்து ஜப்பான் ஒசாகா பல்கலைக்கழகம், டோக்கியோ ஆல்ச்சி தொழில்நுட்ப நிறுவனம், ஜப்பான் தேசிய விண்வெளி ஆய்வு மையமும் ஆய்வு செய்து வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடக்கிறது. இயற்பியலில் ஆர்வமுள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு பெரும் பயனாக இருக்கும்.