

வங்கிகளில் தவறுதலாக இடது கை விரலில் மை வைக்கப்பட்டால் இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
நவம்பர் 19-ம் தேதி அன்று தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், வங்கியில் ஒருவரே அதிகளவில் பணம் மாற்றி வருவதாக சொல்லப்பட்டது. இத்தகைய முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் வங்கிகளில் பணம் மாற்ற வரும் வாடிக்கை யாளர்களின் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
தேர்தலில் வாக்களிக்கும் போதும் மை வைக்கப்படுவது வழக்கம் என்பதால், இதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களின் வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்குமாறு ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தி உள்ளார்.
வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். இதனால் தேர்தலில் வாக்களிக்க அவர்கள் வரும்போது இடது கையில் மை வைக்கப்படும். ஆனால், தவறுதலாக இடது கை விரலில் வங்கிகளில் மை வைக்கப்பட்டால், அவர்கள் வாக்களிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் சத்யேந்திர சிங் வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைக்க வேண்டும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை நிலைநாட்டிக்கொள்ள முடியும்'' என்று கூறியுள்ளார்.