

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியின் கலங்கல்கள் அகற்றப்பட்டு 12 ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கட்டுமான பணிகளில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஏரி 4,752 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையின் நீளம் 3,950 மீட்டராகும். 24.30 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த ஏரி நீர் மூலம் 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சீரமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்பேரில், பொதுப்பணித் துறை பணிகளை தொடங்கியுள்ளது. பணிகள் நிறைவடையும் வரை பருவமழைக் காலங்களில் ஏரிக்கு வரும் நீர் கிளியாற்றின் மூலம் கல்லாறுக்கு திருப்பிவிடப்பட்டு கடலுக்குச் செல்லும். இந்தச் சீரமைப்பு பணியின் ஒருபகுதியாக 1986-ம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கல்கள் உடைத்து அகற்றப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறும்போது, “கலங்கல்கள் அகற்றப்படுவதால் கரைகளின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி தரமான முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கலங்கல்களை உடைத்துவிட்டதால், இனி மழை பெய்தாலும் தண்ணீரை சேமிக்க வாய்ப்பு இல்லை. இதனால், தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கலங்கல்களில் நீர்கசிவு இருந்ததால் அவை உடைத்து அகற்றப்படுகின்றன. கூடுதலாக நீரை சேமிக்கும் வகையிலும், வெள்ளப் பெருக்கின்போது அதிகளவிலான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையிலும் 144 மீட்டர் நீளத்துக்கு 12 ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் மற்றும் ஷட்டர்களை திறந்து மூடுவதற்காக நவீன மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கட்டுமான பணிகளை விவசாயிகளும் நேரில் கண்காணிக்கலாம். ஏரியின் எல்லையை வருவாய்த் துறையினர் வரையறு செய்து முடித்ததும், தூர்வாரும் பணி நடக்கும் என்றனர்.