

சென்னை: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சென்னையில் உள்ளமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பொதுமக்கள்குறைதீர் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விண்ணப்பதாரர்களின் குறைகளுக்கு அதிகபட்சமாக7 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.
சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகியஇடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர13 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் முதலில் ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து, பின்னர் நேரில் சென்று நேர்காணலில் பங்கேற்க வேண்டும். தினந்தோறும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கின்றனர். தத்கல்முறையில் தினமும் 200 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களில் ஏதேனும் குறை இருந்தால் அவர்களுக்குபாஸ்போர்ட் கிடைக்க சற்று காலதாமதமாகும். எனவே, விண்ணப்பதாரர்களின் குறைகளுக்குத் தீர்வுகண்டு, அவர்களுக்கு விரைவாகபாஸ்போர்ட் வழங்குவதற்காக, சென்னையில் உள்ள மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் குறைதீர்மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பாஸ்போர்ட் கோரி தினமும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். சிலர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து குறிப்பிட்ட காலத்துக்குள் பாஸ்போர்ட் பெற்றுவிடுகின்றனர். ஆனால், சிலர் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில்லை. விண்ணப்பத்தை தவறாகப் பூர்த்தி செய்திருத்தல், காவல்துறை விசாரணையில் ஏதேனும் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு பாஸ்போர்ட் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் குறைதீர் மையம் (Integrated Public Grievance Redressal Centre) தொடங்கப்பட்டது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை இ-மெயில் (rpo.chennai@mea.gov.in), தொலைபேசி (044 28513639, 044 28513640), ஸ்கைப் (Id: Rpo Chennai), வாட்ஸ்-அப் (7305330666), ட்விட்டர் (Id: @rpochennai) ஆகியவற்றின் மூலம்தெரிவிக்கலாம். இந்த மையத்தில் உள்ள அலுவலர்கள், விண்ணப்பதாரர்களின் குறைகள், புகார்களின் தன்மைக்கேற்ப தீர்வு காண்பார்கள். சில குறைகள் எங்கள் அலுவலகத்திலேயே தீர்க்கப்படக் கூடியதாக இருக்கும். சில குறைகள் பிறஅலுவலகங்கள் மூலமாக தீர்க்கப்படக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக, விண்ணப்பதாரரின் கல்வி சான்றிதழில் ஏதேனும்பிரச்சினை இருந்தால் அதை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பியும், அதேபோல் விண்ணப்பதாரருக்கு ஏதேனும் குற்றப் பின்னணி இருந்தால் அதை காவல்துறையிடம் அனுப்பியும் விசாரிப்போம். இதன்மூலம், ஒருநாள் முதல் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது. தினசரி 100 முதல் 150 புகார்கள், குறைகள் இந்த மையத்துக்கு வருகின்றன. இவ்வாறு கோவேந்தன் கூறினார்.
வாட்ஸ்-அப் சாட்டிங் மூலம் தீர்வு: விண்ணப்பதாரர்கள் தங்கள் பிரச்சினைகள், குறைகளை வாட்ஸ்-அப் சாட்டிங் மூலம் நேரிடையாக பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிக்கலாம். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 12 முதல் மதியம் 1 மணிவரை விண்ணப்பதாரர்கள் வாட்ஸ்-அப் (7305330666) மூலம் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இதற்கு, பாஸ்போர்ட் அதிகாரி நேரிடையாக விண்ணப்பதாரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்.