Published : 04 Nov 2022 07:51 AM
Last Updated : 04 Nov 2022 07:51 AM
சென்னை: சென்னை ஜார்ஜ் டவுனை மறுசீரமைப்பு செய்வதுடன் மழை, கழிவுநீர் வடிகால், பூங்கா, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கருத்துக்கேட்பு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன கட்டமைப்புகளுடன் மறுசீரமைப்பு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம்திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான அப்பகுதி மக்களின் கருத்து கேட்புக்கூட்டம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜா அண்ணாமலைமன்றத்தில் நேற்று நடந்தது.
வீட்டு வசதித்துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அப்சுல் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், ஜார்ஜ் டவுன் பகுதி வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் அப்பகுதியில் வரக்கூடிய மாற்றங்கள், தற்போது அப்பகுதி மக்கள் சந்திக்கின்ற முக்கிய பிரச்சினைகள், மக்களின் எதிர்பார்ப்பு, என்னென்ன என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து திட்ட விளக்க காட்சிகள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
அப்போது, வீட்டு வசதித்துறை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அத்தனை தேவைகளையும் உள்ளடக்கிய நன்கு வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக சென்னை ஜார்ஜ் டவுன் இருந்தது. ஆனால், தற்போதையை காலத்தில், ஜார்ஜ் டவுன் மக்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த நவீன காலத்தில் பல வசதிகள்தேவையாக உள்ளது. அதனை சரி செய்வதற்கான திட்டம் தான் இந்த மறுமலர்ச்சி திட்டம்.
முதல்முறையாக தமிழகத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிமறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கோவை,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பழைய நகரங்கள்அதன் பழமை மாற்றாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் தொடர்பாக அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில்,சிறிய குடியிருப்புகள், போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் வசதிஇல்லாமை உள்ளிட்ட 7 முக்கியபிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவையெல்லாம் சரிசெய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அன்சுல் மிஸ்ரா பேசும்போது, ‘பொதுமக்கள் கூறிய தங்களது கருத்துகளை இந்த திட்டத்தில் சேர்ப்பதற்காக பரீசிலனை செய்யப்படும். பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க சிஎம்டிஏசார்பில் பிரத்யேக மின்னஞ்சல், இணையதளம் வசதி உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் பார்க்கிங் வசதி, பூங்கா வசதி, பழங்கால கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பது உள்ளிட்ட கோரிக்கையை அதிகம் முன்வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT