

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்துதராவிட்டால் மக்களின் கோபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் யசோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக் கரசர் பேசியதாவது:
500, 1000 ரூபாய் நோட்டுகள் பிரச்சினையை ராகுல்காந்திதான் முதன் முதலில் மக்கள் பிரச்சினையாக மாற்றினார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதில் தினம் ஒரு அறிவிப்பை செய்து வருகின்றனர். இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய பிறகும், மோடி அரசு வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பிரதமர் ஏன் பதில் அளிக்கவில்லை. இன்றைய சூழலில் மருத்துவம், திருமணம், கல்விச் செலவுகளுக்காகக் கூட மக்கள் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூடிக் கிடக்கின்றன. கிராமப்புறங்களில் வங்கிகள் இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை எங்கே மாற்றுவார்கள். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ் வங்கியில் உள்ள பணம், கோடீஸ்வரர்களிடமிருந்து வாராக் கடன் ஆகியவற்றை பெறாமல் அடித்தட்டு மக்களை அலையவிடுகின்றனர். இதற்காக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசுக்கு நான் கூறுவதெல்லாம் “தவறு செய்து இருக்கிறீர்கள், அந்த தவற்றை திருத்திக்கொள்ளுங்கள்” என்பதுதான். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இல்லையெனில், ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இல்லையேல் மக்களின் கோபத்திலிருந்து மத்திய அரசு தப்ப இயலாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “திருநாவுக்கரசருக்கு கொஞ்சம் ஈர்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சாடியவர்கள், தலைமைக்கு எதிராக அறிக்கை விட்டவர்கள் கூட மேடையில் இருக்கின்றனர். திருநாவுக்கரசர் தலைவராக வந்தபிறகு இன்றைக்கு எல்லோரும் காங்கிரஸுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, தயவு செய்து இனிமேல் அப்படி செய்யாதீர்கள்” என்றார்.
இளங்கோவனின் இந்த பேச்சால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.