Published : 04 Nov 2016 11:31 AM
Last Updated : 04 Nov 2016 11:31 AM

திருச்சி தில்லை நகர் அருகே பராமரிப்பின்றி 60 ஆண்டுகள் பழமையான இரவுநேரப் பாடசாலை: கக்கன் திறந்துவைத்த சிறப்புடையது

திருச்சி மாநகரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பி.கக்கன் திறந்து வைத்த இரவு நேரப் பாடசாலை தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

திருச்சி மாநகரின் இதயமாக மாறியுள்ள தில்லை நகருக்கு அருகே காந்திபுரம் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புப் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கல்வியறிவை ஊட்ட இரவு நேரப் பாடசாலையைத் தொடங்க திட்டமிட்ட நல்ல உள்ளம் படைத்த சிலரின் உதவியால் அந்த பகுதியில் இருந்த பொது இடத்தில் ஓட்டுக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

1956-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பி.கக்கன், ‘மகாத்மாஜி’ என்ற பெயரிலான இந்த இரவுநேரப் பாடசாலையைத் திறந்து வைத்தார்.

வரலாற்றுச் சிறப்பை இழந்து…

1980-ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த இந்த பாடசாலை அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிதலமடையத் தொடங்கி, தற்போது கூரை முழுவதும் விழுந்து, குப்பைகள் சேருமிடமாக மாறி, அதன் வரலாற்றுச் சிறப்பை இழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

இந்த பாடசாலையில் படித்த அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அதிகாரியும், மக்கள் நலச் சங்கத் தலைவருமான கல்யாணசுந்தரம், ‘தி இந்து’விடம் கூறியது:

அந்தக் காலத்தில் படிப்பறிவு அதிகம் இல்லை, பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் படிப்பறிவை ஊட்ட வேண்டும் என்பதற்காக இந்த இரவு நேரப் பாடசாலை திறக்கப்பட்டது. இங்குள்ள சிறுவர்கள் எல்லாம் இரவு நேரத்தில் இங்கு படிப்போம். எங்கள் வீடுகளில் மின் விளக்குகள் கிடையாது. இந்த பாடசாலையில் மின் விளக்கு இருந்தது.

பயனடைந்தோர் பலர்…

பாடசாலைக்கு படித்தவர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொரு நாளும் வந்து எங்களுக்கு பாடங்களை நடத்துவார்கள். இங்கு படித்த பலரும் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், பொதுத் துறை மற்றும் அரசு ஊழியர்களாகவும் உருவாகினர்.

1980-ம் ஆண்டு வரையில் செயல்பட்ட இந்த பாடசாலை அதன்பிறகு பராமரிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. பலருக்கும் மனு அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

சீரமைக்க வேண்டும்…

பலரின் வசதியான வாழ்க்கைக்கு வேறாக இருந்து வளர்த்து விட்ட இந்த பாடசாலையை சீரமைத்து, இங்குள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடங்களை நடத்த வேண்டும் அல்லது நூலகமாக மாற்றி இந்த பகுதி மக்களின் பொதுஅறிவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இந்த பாடசாலையில் படித்தவரும் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவருமான காமராஜ்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தை சீரமைத்து, பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்பது தான் இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x