Last Updated : 03 Nov, 2022 06:34 PM

 

Published : 03 Nov 2022 06:34 PM
Last Updated : 03 Nov 2022 06:34 PM

தஞ்சை பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு பின்பு ராஜராஜ சோழன் சதய விழாவில் இசைக்கப்பட்ட சகோட யாழ்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பழமையான இசைக்கருவியான சகோட யாழ் | படம் ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் சகோட யாழ் எனும் பழமையான பண்ணிசை கருவியை ஓதுவார்கள் இசைத்தனர்.

7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள், திருவாரூர் தியாகராஜர் கோயில் தினமும் பாடப் பெற்றதை கேட்ட மாமன்னன் ராஜராஜ சோழன், இந்தப் பாடலின் மூலப் பொருட்கள் அடங்கிய ஏடுகள் எங்குள்ளது என தேடினார். அப்போது நம்பியாண்டவர் நம்பி, தேவார ஏடுகள் தில்லையில் உள்ளதாக கூறினார். இதையடுத்து மாமன்னன் ராஜராஜசோழன் தில்லையாகி சிதம்பரத்துக்கு சென்று தேவார ஏடுகளை மீட்க சென்றபோது, அவருடன் சென்றவர்கள் "சகோட யாழ்" எனப்படும் பண்ணிரு இசைக் கருவியை தில்லையில் இசைத்தும், அங்கிருந்த அந்தணர்களிடம் பேசியும் தேவார ஏடுகளை மீட்டெடுத்தார்.
சகோட யாழ் எனப்படும் பண்ணிரு இசைக்கருவியானது 14 நரம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நரம்புகளை மீட்கும்போது ஏற்படும் இசையே ஓதுவார்கள் இசைத்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சகோட யாழ் இசைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு காலப்போக்கில் இந்த இசைக்கருவியானது மறைந்து போனது.

இந்நிலையில், பழமையான இந்த சகோட யாழ் இசைக் கருவியை ஓதுவார்கள் முழு முயற்சி எடுத்து அதனை மீட்டுருவாக்கம் செய்து இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதயவிழாவின்போது, திருமுறைகள் சிறப்பு வழிபாட்டின்போது ஒதுவார்கள் இசைத்து திருவீதியுலாவாக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் பெரிய கோயில் ஓதுவார் சிவனேசன் கூறுகையில், "மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் ஓதுவார்களால் இசைக்கப்பட்ட பழமையான இசைக்கருவியான சகோட யாழ், காலப்போக்கில் மறைந்து போனது. இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு ஓதுவார்களுக்கு சகோட யாழ் குறித்து விழிப்புணர்வும், அதை இசைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஓதுவார்களின் முழு முயற்சியுடன் இந்த பழமையான சகோட யாழ் இசைக்கருவி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பூஜைகள் செய்யப்பட்டு இசைக்கப்பட்டது. தொடர்ந்து இனி தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் இந்த இசைக்கருவியை இசைக்க ஓதுவார்கள் முழுமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x