Last Updated : 16 Nov, 2016 04:46 PM

 

Published : 16 Nov 2016 04:46 PM
Last Updated : 16 Nov 2016 04:46 PM

கறுப்புப் பணத்தின் துருப்புச் சீட்டாக மாறும் ஜீரோ அக்கவுண்ட்

கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் அன்று இரவு நள்ளிரவு முதல் புழக்கத்துக்குப் பயன்படுத்த முடியாது என்று அறிவித்த சில நிமிடங்களிலேயே கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் உடனடியாக தங்க நகை விற்பனைக் கடைகளை முற்றுகையிட்டனர். வழக்கமாக இரவு 9 மணிக்கெல்லாம் மூடப்படும் நகைக் கடைகள் அன்றைய தினம் விடிய விடிய விற்பனையில் ஈடுபட்டன.

இதையடுத்து மத்திய அரசு புது உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நகை வாங்கவேண்டுமென்றால் பான் கார்டு அவசியம் என அறிவித்தது. பின்னர் நகைக் கடைகளில் கலால் வரித்துறையினர் மூலம் ரெய்டு நடத்தியதோடு, அந்தக் கடைகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றையும் பறிமுதல் செய்து சோதனைக்கு உள்ளாக்கியுள்ளனர்.இதனால் அதிர்ந்து போன நகை விற்பனையாளர்கள் தற்போது கையை பிசைந்த நிலையில் உள்ளனர்.

கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் ஒரு கதவு மூடப்பட்ட நிலையில், அவர்கள் மாற்று வழியில் சிந்திக்கத் துவங்கி, அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக வங்கி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு வங்கியிலும் பூஜ்யம் நிலுவைத்தொகை கணக்குத் தாரர்களின் அடையாளம் கண்டு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.49 ஆயிரத்து 500 செலுத்தி வருகின்றனர் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்தவேண்டுமெனில் பான் கார்டு அவசியம் என்பதால், ரூ.49 ஆயிரத்து 500 டெபாசிட் செய்கின்றனர்.

கடலூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராமங்களில் செயல்படும் வங்கிகளில் பூஜ்யம் நிலுவைத் தொகை உள்ளவர்களின் கணக்குகளில் கடந்த சில தினங்களாக திடீரென பணம் சேமிப்பாகிறது.அவ்வாறு தங்கள் கணக்கில் சேமித்தவர்கள் ரூ.10 ஆயிரத்தை மட்டும் மறுநாள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் ரூ.4 ஆயிரத்தை சில்லறையாகவும் பெற்றுச் செல்கின்றனர். அதேபோன்று ஆட்டோ மற்றும் வேன்களை கடனில் பெற்றவர்களும் தங்களது கடன் தொகையை விரைவாக செலுத்திவருகின்றனராம். இதற்கு ஒரு சில வங்கி மேலாளர்களும் உடந்தையாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்ட ஊராட்சிகளில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த பணப் பரிவர்த்தனையில் அதிகமாக ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வங்கிகளில் நீண்டகால தவணை பெற்றவர்களும் தற்போது கடனை அடைத்துவருவதாகவும், இவர்களுக்குப் பின்புலமாக ஆளும்கட்சியைச் சேர்ந்த நபர்கள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், ''பூஜ்யம் நிலுவைத் தொகை உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென பண பரிவர்த்தனை அதிகரித்துவருகிறது எனத் தகவல் கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி ஒருவர் எதிர்வரும் 24-ம் தேதி வரை ரூ.4 ஆயிரத்துக்கு சில்லறை பெற முடியும். அதேபோன்று அவரது சேமிப்புக் கணக்கிலிருந்து வாரத்தில் இருமுறை தலா ரூ.10 ஆயிரம் பெற முடியும். அதேநேரத்தில் ஏடிஎம் மூலம் ரூ.2 ஆயிரம் எடுத்துக்கொள்ளும் போது, வங்கியிலிருந்து ரூ.8 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் வங்கி மென்பொருள் மாற்றப்பட்டுள்ளது.

பூஜ்யம் நிலுவைத் தொகை உள்ளவர்கள் திடீரென அதிக அளவில் பணம் செலுத்தவரும் போது, அதிக அளவில் திடீரென பணப் பரிமாற்றம் நடைபெற்றால் நாளை உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என அவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம். ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

பூஜ்யம் நிலுவைத் தொகைக் கொண்ட ஒருவரின் சேமிப்புக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு அதிகமான பரிவரத்தனை நடைபெற்றாலே கம்ப்யூட்டரில் பணத்தை ஏற்காது. எனவே ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதால் கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் வலையில் சிக்கவேண்டாம் என எங்களால் முடிந்தவரை அறிவுருத்தி வருகிறோம்'' என்றார்.

போதிய எழுத்தறிவு இல்லாத பாமர மக்களை கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களது துருப்புச் சீட்டாக மாற்றி ஆதயம் தேடத் தொடங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கி அடுத்து என்ன செய்யப்போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x