பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: உடனடியாக தேர்வுக்குழு நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்.

10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள். பதவி உயர்வை தாமதப்படுத்தினால் அவர்களுக்கு பணி நிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியர்களில் 10 பேர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனர்.

பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுனர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in