கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
Updated on
2 min read

கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்:

பாலமுரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. கவர்ந்திழுக்கும் தெய்வீகக் குரலைப் பெற்றவர் அவர். உலகெங்கும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் தனது இசைத் திறமையைக் காட்டி வந்தார். எல்லைகளைக் கடந்த படைப்புத் திறன் கொண்ட அவரது மரணம் கர்னாடக சங்கீத உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா:

பிரபல கர்னாடக இசை விற்பன்னரும், பின்னணிப் பாடகருமான பாலமுரளி கிருஷ்ணா மறைவுச் செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தனது 6-வது வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய அவர் கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். கர்னாடக இசையை முறையாக கற்று தனது 8-வது வயதில் முரளி கிருஷ்ணா என்ற பெயரில் இசைக் கச்சேரியை நடத்தினார். அன்றுமுதல் ‘பால’ என்ற அடையாளத்துடன் பாலமுரளி கிருஷ்ணா என அழைக்கப்பட்டார்.

ஸ்ரீபத்ராசலம் ராமதாஸ், ஸ்ரீஅன்னமாச்சார்யா கீர்த்தனை களை பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. தாய் மொழியான தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். விரிவான இசை ஆராய்ச்சிக்காக எம்.கே.பி. அறக்கட்டளையை ஏற்படுத்தியவர். திரைத் துறையிலும் சாதனை படைத்த அவர் 400 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். ‘பக்த பிரகலாதா’ திரைப்படத்தில் நாரதராக நடித்தவர். பல்வேறு படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் 75-வது பிறந்த நாள் மற்றும் ‘செவாலியே’ விருது பெற்றதற் கான பாராட்டு விழா கடந்த 2005-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதில் நான் கலந்துகொண்டு அவரைப் பாராட்டிப் பேசினேன். அப்போது எனக்காக ‘ஜெய ஜெய லலிதே’ என்ற ராகத்தை அர்ப்பணித்தார். அதே விழாவில் அவருக்கு ‘கந்தர்வ கான சாம்ராட்’ என்ற பட்டத்தை தமிழக அரசின் சார்பில் நான் வழங்கினேன்.

இசைத் துறையில் அளப்பரிய பணியாற்றிய பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு இசைத் துறையினருக்கு மட்டுமல்லாது எனக்கும் மிகப்பெரிய இழப்பாகும், இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பாலமுரளி கிருஷ்ணாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தி னர், நண்பர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு கர்னாடக இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பாலமுரளி கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இசை உலகத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல்ஹாசன்:

81 வருட மகாகுருவான பாலமுரளி கிருஷ்ணா லட்சக்கணக்கா னோரை தனது இசையை நோக்கி இழுத்து வந்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி உள்ள இந்தக் காலகட்டத்தில் அவர் மறைவுக்கு பிறகும் அவரது இசையை கேட்கும் வாய்ப்பு இருப்பது மகிழ்ச்சி. மரணம் அவரது குரலை மவுனிக்க முடியாது என கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் வாணி ஜெயராம், மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, நடிகர்கள் தனுஷ், விஷால் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாலமுரளி கிருஷ்ணா வின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in