கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் என்ஐஏ விசாரணை
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக நேற்று 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், தமிழக காவல் துறை சார்பில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஜமேஷா முபின் 3 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே அக். 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அக்டோபர் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பென்டரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் (பி.இ.டி.என்), நைட்ரோ கிளிசரின், பொட்டாசியம் நைட்ரேட் அலுமினியம் பவுடர், ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவம், சுரங்கத் தொழில் துறையினரால் அதிகம் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வாங்க பல்வேறு கட்டுப்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் உள்ளன. ஆனால், ஜமேஷா முபினுக்கு இவை எப்படிக் கிடைத்தன என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவற்றை வாங்க வெளி நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், அவர்களை அடையாளம் காணும் பணியை என்ஐஏ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள, குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்கியுள்ளவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
அதேசமயம், தமிழக காவல் துறை சார்பில், அப்சர்கானின் வீடு மற்றும் ஜி.எம். நகரில் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி காஜா ஹுசைன் வீடு உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்சர்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முபின் கோவையில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், முபின் 2 செல்போன்கள் மற்றும் 3 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்துக்கு முன்னர், முபின் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே நடந்த செல்போன் உரையாடல் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
