

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் இதுவரை, அணையின் கொள்ளளவைப்போல 6 மடங்கு நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டதால், மேட்டூர் அணை கடந்த ஜூலை 16-ம் தேதி அதன் முழுக்கொள்ளளவான 120 அடி உயரத்தை எட்டி நிரம்பியது. அதன் பின்னர் ஒரு சில நாட்களைதவிர்த்து, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து இதுவரை, அதன் முழுக்கொள்ளளவைப்போல 6 மடங்கு நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீர்ப்பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி மேட்டூர் அணைக்கு ஜூன் 1-ம் தேதியில் இருந்து தற்போது வரை 590 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் ஏற்கெனவே 87 டிஎம்சி-க்கு மேல் நீர் இருப்பு இருந்த நிலையில், 574 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது, அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அணை நிரம்பியிருப்பதால், 26 ஆயிரம் கனஅடி நீரும் டெல்டாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது என்றனர்.
மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு 93.47 டிஎம்சி என்ற அளவின் அடிப்படையில், அணையில் இருந்து இதுவரை வெளியேற்றப்பட்ட 574 டிஎம்சி நீரைக் கணக்கிடும்போது, மேட்டூர் அணையின் கொள்ளளவைப்போல, 6 மடங்கு நீர் காவிரியில் தற்போது வரை வெளியேற்றப்பட்டுள்ளது. அதில், பாசனத்துக்குப்போக, சுமார் 5 மடங்கு நீர் உபரியாகச் சென்று கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.