

திருப்பூர்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடுமலையில் பழமையான பிரசன்னவிநாயகர் கோயிலில் முருகன், சிவபெருமான் சிலைகள் உள்ளன. 1962-ம் ஆண்டுமுதல் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகள் மற்றும் சூரனை வதம்செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
சூரனை வதம்செய்ய, வெள்ளிவேல் பயன்படுத்துவது வழக்கம். ஆண்டுதோறும் இந்நிகழ்வின்போது மட்டுமே முருகன் கையில் வெள்ளி வேல் இருக்கும். மற்றநாட்களில் பாதுகாப்பு அறையில் வேல் வைக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் கந்தசஷ்டி விழாவின்போதுவெள்ளி வேல் பயன்படுத்தப்படவில்லை.
வெள்ளி வேல் தரிசனம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அறநிலையத் துறை அதிகாரியின் மெத்தனப் போக்கால், ஆகம விதிகள் மீறப்பட்டது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ளி வேல் திருடு போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் விசாரித்து, வெள்ளி வேலின் உண்மை நிலைமையை கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.