Published : 03 Nov 2022 04:30 AM
Last Updated : 03 Nov 2022 04:30 AM

வடகிழக்கு பருவமழை | கோவை நகரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோவை: பருவமழை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருவதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது: வடகிழக்கு பருவமழைதற்போது தீவிரமடைந்துள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் பல்வேறு பிரதான கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதி, கிக்கானி பாலம் ஆகியவற்றில் கூடுதலாக2 அதிவேக மின்மோட்டார்கள் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரின் அளவை கண்காணிக்கவும், தேவைப்படும் இடங்களில்மழைநீர் வடிகால்களை தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் தலா 100 மணல் மூட்டைகள் வீதம் 500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர்வடிகால்கள், சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்துள்ள சாய்தளங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் தினமும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க ஏதுவாக, மாநகராட்சி பிரதானஅலுவலகத்தில் 24 மணி நேரமும்செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 8190000200, 0422-2302323, 0422-2300132 ஆகிய எண்களின் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் அரசு, மண்டல உதவி ஆணையர்கள் முத்துராமலிங்கம், சேகர், மோகனசுந்தரி, அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x