

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், மூன்றாவது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், நகர் முழுவதும் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பொதுசுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 1,800-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இப்பணிகளை, ‘அவுட் சோர்சிங்’ முறையில் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைக் கண்டித்து, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோர், கடந்த 31-ம் தேதி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி வளாகத்துக்கு காலை 8 மணிக்கு வரும் அவர்கள், அங்கு அமர்ந்து மாலை வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் குப்பை மலை போல தேங்கி, துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
போராட்டத்துக்கு பாஜக ஆதரவு: தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தூய்மைப் பணியாளர் ஒருவர், மாநகராட்சி அலுவலக மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களை, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோல ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
வலுக்கிறது போராட்டம்: ஒப்பந்தப் பணியாளர்கள் நியமன விவகாரத்தில் அரசின் உத்தரவு, அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொதுவானது என்பதால், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, மேயர் நாகரத்தினம் அளித்த உறுதிமொழியையும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில், திமுக தொழிற்சங்கமான எல்பிஎப் உட்பட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில், தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக இன்று (3-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, மேயர் அளித்த உறுதி மொழியையும்தூய்மைப் பணியாளர்கள் ஏற்கவில்லை.