

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் அத்துமீறல் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டுவருவது கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கை - இந்திய மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கு இன்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 5-ம் தேதி இருநாட்டு அமைச்சர்கள் சந்தித்து பேசவும், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடிக்கப்பட்டதுடன், முனுசாமி, ராஜேந்திரன், ராமர், மற்றொரு முனுசாமி ஆகிய நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பானம் சிறையில் அடைத்துள்ளனர். ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் கைது நடவடிக்கை என்று இலங்கை அரசு கபடநாடகம் ஆடுவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
கடந்த பல ஆண்டுகாலமாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். பலர் தங்களின் படகுகளை இழந்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவும், நிரந்திர தீர்வு காணவும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களது படகுகள் திரும்ப கிடைத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.