திருப்புகழ் குழு பரிந்துரைத்தபடி பணி முடிந்த இடங்களில் பாதிப்பில்லை; 3 சுரங்கப் பாலங்களில் தண்ணீர் தேக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருப்புகழ் குழு பரிந்துரைத்தபடி பணி முடிந்த இடங்களில் பாதிப்பில்லை; 3 சுரங்கப் பாலங்களில் தண்ணீர் தேக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Updated on
2 min read

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவின் பரிந்துரைப்படி மழைநீர் வடிகால் கட்டப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. 3 சுரங்கப் பாலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த அக்.31-ம் தேதி மிகக் கனமழை பெய்திருந்த நிலையில், நவ.1-ம் தேதியும் மிகக் கனமழை நீடித்தது. இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மழைநீர்தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக, மாநகராட்சியின் 15மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், மண்டலஅதிகாரிகள், மண்டல பொறியாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவமழைபாதிப்பு தடுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவின் பரிந்துரைப்படி 80 சதவீத மழைநீர்வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மழைநீர் தேக்கம் இல்லை. கடந்த அக்.31, நவ.1, 2 ஆகிய 3 நாட்களில் சென்னையில் சராசரியாக 20 செமீ மழை பதிவாகியுள்ளது. திரு.வி.க.நகர் பகுதியில் 35 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வளவு மழை பெய்யும்போது, தண்ணீர் தேக்கம் இருக்கத்தான் செய்யும். கொளத்தூர், புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு 700 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. அவற்றை வெளியேற்ற 700-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு 536 மோட்டார் பம்புகளை தயாராக வைத்திருக்கிறோம். தற்போது 65 இடங்களில் மட்டும்தான் நீர் தேங்கியுள்ளது. அங்கு 156 மோட்டார்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் 16 சுரங்கப் பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கணேசபுரம், ரங்கராஜபுரம், மாணிக்கம் நகர் ஆகிய 3 பாலங்களில் மட்டுமே இன்று காலையில்தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி நடவடிக்கையால் இரு இடங்களில்நீர் வடிந்தது. ரங்கராஜபுரம் சுரங்கப்பாலத்தில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 169 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. அந்த முகாம்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுவழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொளத்தூர், புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று முன்தினம் இரவுவால்டாக்ஸ் சாலை, ரெட்டேரி, கொளத்தூர் பெரியார் நகர் ஆகியபகுதிகளில் மழைநீரை வடியச் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித் துறை முதன்மைத் தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னைமண்டல பொறியாளர் ஆரியத்தரசுராஜசேகர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in