Published : 03 Nov 2022 06:54 AM
Last Updated : 03 Nov 2022 06:54 AM
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 4,806 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3,396பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மாதத்தில் 616 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அடுத்த 2, 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்புசற்று அதிகமாக இருக்கும். டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சைஅளிக்கத் தேவையான மருந்துகள்அரசிடம் உள்ளன. கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT