Published : 03 Nov 2022 07:29 AM
Last Updated : 03 Nov 2022 07:29 AM

மழை காலத்தில் தடையின்றி சீராக மின்சாரம் வழங்க 11,000 மின் ஊழியர்கள் கூடுதலாக நியமனம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: பருவமழையின்போது எவ்வித தடையும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரம்ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரியம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் உள்ள 44 மின்பகிர்மான வட்டங்களில் 760 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 15-20 ஊழியர்கள் உள்ளனர். மின்விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாமல் தடுக்க இக்குழுவினர் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள்.

சென்னையை பொருத்தவரை, மழை காரணமாக எந்த இடத்திலும் மின்தடை ஏற்படவில்லை. சென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர பகுதிகளில் பகல் நேரத்தில் 6,540 பேர், இரவு நேரத்தில்2,400 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மழையை எதிர்கொள்ள, வழக்கத்தைவிட 11 ஆயிரம் ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள். மக்களின் புகார்களை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவசதியாக மின்னகத்தில் கூடுதலாக 15 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஊழியர்கள் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. துணைமின் நிலையங்களில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள்தான் பராமரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் எதுவும் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.

சென்னையில் வீட்டுக்குள் ஏற்பட்ட மின்கசிவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் 5 மண்டலங்களில் பூமிக்கு அடியில் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். மின்வாரியத்தில் உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. மழை காலத்தில் பணிபுரிய வசதியாக, மின் ஊழியர்களுக்கு ரெயின்கோட் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் வழங்கப்படும். மழை காரணமாக தமிழகத்தின் தினசரி மின்தேவை 13,350 மெகாவாட் அளவாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு பணப் பயன்களை வழங்குவதற்கான கோப்பு, நிதித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் அவர்களுக்கான பணப் பயன்கள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x