Published : 03 Nov 2022 07:11 AM
Last Updated : 03 Nov 2022 07:11 AM
சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் நீர் தேங்கி இருந்த நிலையில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் பெண் ஒருவர் நேற்று தவறி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பூர் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் கடந்த 3 நாட்களாகவே மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், அவசரத் தேவைக்கு கூட வெளியில் வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தேங்கிய மழைநீரின் நடுவே அப்பகுதியில் வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை இருந்து வருகிறது.
அப்பகுதி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கியுள்ளது. அங்கு மழைநீர் வடிகாலின் ஆள் நுழைவு மூடியை அகற்றி தூர் வாரிய நிலையில், அந்த மூடி முறையாக மூடாமல் விடப்பட்டுள்ளது. கலங்கிய நீரில் மூடி இல்லாததை அறியாத, அந்த வழியே பணிக்கு நடந்து சென்ற பெண் ஒருவர் மழைநீர் வடிகாலுக்குள் தவறி விழுந்தார். வடிகாலுக்குள் மூழ்கிய அவரை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் விரைந்து சென்று, அப்பெண்ணை தூக்கி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். மயங்கி இருந்த அப்பெண்ணுக்கு அங்கிருந்த பெண்கள் முதலுதவி வழங்கியதைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்து, மீண்டும் பணிக்கு சென்றார். இந்த காட்சி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியை மூடினர். இதுபோன்று மாநகராட்சி பகுதிகளில் மூடி இல்லாமல் இருந்தால் தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT