

சென்னை: சென்னையில் தொடர் மழை காரணமாக, பரங்கிமலை மெட்ரோரயில் சாலை, தரைதள வாகன நிறுத்துமிடத்தில் மழை நீர் தேங்கி, மெட்ரோ ரயில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் கடந்த 2 நாள்களாக தொடர் மழை பெய்தது.இதன் காரணமாக, சென்னையில் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி, குளம் போல காட்சியளித்தன. இதுபோல, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை, வாகன நிறுத்தமிடத்தில் மழை நீர் தேங்கியதால், பயணிகள் அவதிப்பட்டனர்.
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியது. சாலையில் தேங்கிய மழை நீர் தரைதளத்துக்குள் செயல்படும் வாகன நிறுத்துமிடத்தில் புகுந்தது.இதனால், அங்கு வாகனங்களில்சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். அலுவலகங்களுக்கு சென்றவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.
இதற்கிடையே, வாகன நிறுத்தும் இடங்களில் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களின் மேம்பால தடத்தில், பக்கவாட்டில் இருக்கும் திறந்தவெளி வாயிலாக, மழைநீர் உள்ளேபுகுந்து விடுகின்றன. இதையும், உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் மெட்ரோ நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.